பயன்படுத்திய வாகன தயாரிப்புகளுக்கான யோசனை தொடர்பில் CMTA கவலை தெரிவிப்பு
Summary
கொவிட்-19 தொற்றாளர்களின் எண்ணிக்கை மற்றும் மரணங்கள் தொடர்ந்தும் அதிகரித்து வருகின்றமையானது, இலங்கையில் கொவிட்-19 நிலைமை மோசமடைந்து வருவதை காட்டுகிறது. நாட்டில் தினமும் சுமார் 3,000 தொற்றாளர்கள் பதிவாகின்றனர். இது சில மாதங்களுக்கு முன்பு இருந்ததை விட 1,000% அதிகரிப்பாகும். COVID-19 பரவலின் ஆரம்பத்தையடுத்து 2020ஆம் ஆண்டின் முற்பகுதியிலிருந்து நாட்டின் அந்நியச் செலாவணி இருப்புகளைப் பாதுகாப்பதற்கும், நாணய […]
கொவிட்-19 தொற்றாளர்களின் எண்ணிக்கை மற்றும் மரணங்கள் தொடர்ந்தும் அதிகரித்து வருகின்றமையானது, இலங்கையில் கொவிட்-19 நிலைமை மோசமடைந்து வருவதை காட்டுகிறது. நாட்டில் தினமும் சுமார் 3,000 தொற்றாளர்கள் பதிவாகின்றனர். இது சில மாதங்களுக்கு முன்பு இருந்ததை விட 1,000% அதிகரிப்பாகும்.
COVID-19 பரவலின் ஆரம்பத்தையடுத்து 2020ஆம் ஆண்டின் முற்பகுதியிலிருந்து நாட்டின் அந்நியச் செலாவணி இருப்புகளைப் பாதுகாப்பதற்கும், நாணய பெறுமதியை நிலையானதாக வைத்திருப்பதற்கும், வாகன இறக்குமதியைக் கட்டுப்படுத்துவதற்கு அரசாங்கம் எடுத்துள்ள முடிவை, சிலோன் மோட்டார் வாகன வர்த்தகர்கள் சங்கம் (CMTA) புரிந்து கொண்டு வருகிறது.
எவ்வாறாயினும், பயன்படுத்தப்பட்ட உதிரிப்பாகங்களைப் பயன்படுத்தி வாகனங்களை தயாரிப்பதை அனுமதிக்கும் முன்மொழிவு தொடர்பில் அமைச்சரவையினால் பரிசீலிக்கப்பட்டு வருவதாகவும், அது நிறைவேற்றப்பட்டால், உதிரிப்பாக ஒருங்கிணைப்பு வாகனங்கள் உருவாக்க சட்ட திட்டங்கள் உள்ளிட்ட பல சட்ட திட்டங்களையும் அது மீறும் என்பது தொடர்பிலும் CMTA தனது அதிருப்தியை வெளியிடுகிறது. இத்திட்டத்தை CMTA கடுமையாக எதிர்ப்பதுடன், இவ்வாறு பயன்படுத்தப்பட்ட பகுதிகள் மூலம் தயாரிக்கப்பட்ட வாகனங்களின் பாதுகாப்பின் தரம், ஆயுள் மற்றும் நம்பகத்தன்மை தொடர்பில் கேள்விக்குரியதாக அமைவதை CMTA சுட்டிக் காட்டுகின்றது.
CMTA தலைவர் யசேந்திர அமரசிங்க இது தொடர்பில் தெரிவிக்கையில், “இம்முன்மொழிவானது, குறித்த வாகனங்களின் உரிமையாளர்களையும், பொதுமக்களையும் பெரும் ஆபத்தில் ஆழ்த்தியுள்ளது. காரணம், வீதி விபத்துக்களுக்கு வழிவகுக்கும் குறைபாடுகளின்றி குறித்த உதிரிப் பாகங்கள் உள்ளனவா, அவை தீப்பிடிக்கும் வாய்ப்பை கொண்டனவா உள்ளிட்டவற்றை உறுதி செய்வதற்கான எவ்வித நடைமுறைகளோ, வழிமுறைகளோ இல்லை. இம்முன்மொழிவின் மூலம், வாகனங்களை நிறுவுபவர்கள், அரசாங்கத்திற்கு கிடைக்க வேண்டிய பில்லியன் கணக்கான வரி வருமான மோசடிக்கு வழி வகுக்கும் என்பதுடன், பயன்படுத்தப்பட்ட உதிரிப்பாகங்களின் குறைத்து மதிப்பிடப்பட்ட பெறுமானத்திற்கான உதிரிப்பாக வரியை மாத்திரமே செலுத்துவதற்கும் இம்முன்மொழிவு வழிவகுக்கும். இது இறக்குமதி செய்யப்பட்ட காரொன்றின் ஒரு சிறிய பகுதியே ஆகும்.” என்றார்.
மேலும், இறக்குமதி தடைகளுக்கு முன்னர் திறக்கப்பட்ட பல LC கள் இன்னும் அரசாங்கத்தால் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள நிலையில், இதுபோன்ற ஒரு திட்டம், மோட்டார் வாகன துறையினருக்கு நியாயமற்ற ஒன்று என CMTA வாதிடுகிறது. மேலும், மார்ச் 2021 இல், கலாநிதி பீ. பி. ஜயசுந்தரவின் வேண்டுகோளுக்கமைய, குறைந்தபட்ச அளவிலான வாகன இறக்குமதிக்கான ஒதுக்கீடு முறைமை தொடர்பில், CMTA முன்மொழிவை சமர்ப்பித்திருந்தது. தொழிலாளர்களின் தொழில்களை பறிக்காதிருக்கவும், இத்தொழில்துறையின் நிலைப்புக்கும் அனுமதிக்கும் எனும் வகையில் அம்முன்மொழிவு முன்வைக்கப்பட்டது. முழுமையான மோட்டார் தொழிற்துறையும் தற்போது எதிர்கொண்டுள்ள இந்த சிக்கலான பிரச்சினை தொடர்பில் முன்னுரிமையளித்து, உரிய நடவடிக்கையை எடுக்க வேண்டுமென, CMTA அரசாங்கத்தை வலியுறுத்துகிறது, அத்துடன் சந்தையில் வாகனங்களின்மை காரணமாக, வாகன விலைகள் உயர்ந்துள்ளமையால் பொது மக்களும் இதனால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
Ceylon Motor Traders Association (CMTA), 1920 ஆம் ஆண்டு ஸ்தாபிக்கப்பட்டதுடன், இலங்கை வர்த்தக சம்மேளனத்தின் ஒன்றிணைக்கப்பட்ட துணை அமைப்பாகவும், இது வாகன உற்பத்தியாளர்களை உள்நாட்டில் நியமிக்கப்பட்ட உரிமையாளர்கள் (பொதுவாக ‘முகவர்கள்’ என்று அழைக்கப்படுகிறது) மூலம் பிரதிநிதித்துவப்படுத்துகிறது. இப் பிராந்தியத்தில் மிக சிரேஷ்ட வாகன வர்த்தக சங்கம் இதுவென்பதுடன் தமது முகவர்களின் ஊடாக அனைத்து முன்னணி சர்வதேச வர்த்தக நாமங்களையும் பிரதிநித்துவம் செய்கின்றது. CMTA உறுப்பினர்கள் கூட்டாக ஆயிரக்கணக்கான இலங்கையர்களை பணிக்கு அமர்த்தியுள்ள அதே நேரத்தில், பொறியியல் மற்றும் முகாமைத்துவத்தில் சர்வதேச ரீதியாக கடைபிடிக்கப்படும் சிறந்த நடைமுறைகளை நாட்டிற்கு கொண்டு வருகிறார்கள். மேலும், நன்கு பயிற்றப்பட்ட மற்றும் வெளிநாடுகளில் வேலை செய்யக்கூடிய ஒரு தொழிற்படையை உருவாக்குகின்றது. CMTA உறுப்பினர்கள் அனைவரும் அவர்கள் பிரதிநிதித்துவப்படுத்தும் உற்பத்தியாளர்களால் கணக்காய்வு செய்யப்படுவதோடு, இறக்குமதி செய்யும் வாகனங்களை அவர்கள் உற்பத்தியாளரிடமிருந்து நேரடியாக தருவிப்பதுடன், அவை அந்தந்த நாட்டின் தேவைப்பாட்டிற்கு ஏற்ற அம்சங்களுடன் வடிவமைக்கப்பட்டு, முழு உத்தரவாதத்துடன் வருவதால் இலங்கை மக்களுக்கு வாகனத்தின் தரம் மற்றும் முகவரின் நம்பகத்தன்மை குறித்து உத்தரவாதமளிக்கப்படுகிறது.
– முற்றும் –