Tamil

தடைகளற்ற சேவைகளை வழங்க ஒன்லைன் தளத்திற்கு விரைவாக மாறியதன் மூலம் இலங்கையின் உயர் கல்வித் துறை மற்றும் பொருளாதாரத்திற்கான தனது அர்ப்பணிப்பினை நிரூபித்த IIT

Summary

இலங்கையில் பிரித்தானிய உயர் கல்வியை வழங்குவதில் முன்னோடியாகவும், நாட்டிலுள்ள முதன்மையான தகவல் தொழில்நுட்பம் மற்றும் வணிகத் துறை பல்கலைக்கழகமாகவும் திகழும் Informatics Institute of Technology (IIT), தனது கல்வியக செயற்பாடுகளின் அனைத்து அம்சங்களும் சீராக நடப்பதனை உறுதி செய்வதற்கும்,  கொவிட்- 19 நோயின் அச்சுறுத்தலைத் தணிப்பதற்கும், தனது முழு செயற்பாடுகளையும் ஒன்லைன் தளத்துக்கு நகர்த்தியதனால், […]

இலங்கையில் பிரித்தானிய உயர் கல்வியை வழங்குவதில் முன்னோடியாகவும், நாட்டிலுள்ள முதன்மையான தகவல் தொழில்நுட்பம் மற்றும் வணிகத் துறை பல்கலைக்கழகமாகவும் திகழும் Informatics Institute of Technology (IIT), தனது கல்வியக செயற்பாடுகளின் அனைத்து அம்சங்களும் சீராக நடப்பதனை உறுதி செய்வதற்கும்,  கொவிட்- 19 நோயின் அச்சுறுத்தலைத் தணிப்பதற்கும், தனது முழு செயற்பாடுகளையும் ஒன்லைன் தளத்துக்கு நகர்த்தியதனால், தனது ஆயிரக்கணக்கான மாணவர்கள் மற்றும் நாட்டுக்கான கடமைகளை பூர்த்தி செய்வதற்கான முன்னேற்றகரமான நடவடிக்கைகளை எடுத்துள்ளது.

இலங்கையின் ICT தொழிற்துறையானது, 2022 ஆம் ஆண்டளவில் ஏற்றுமதியில் 5 பில்லியன் அமெரிக்க டொலர்களை எட்டுவதனையும்,  இந்தச் செயன்முறையில் 200,000 நேரடித் தொழில்களை உருவாக்குவதிலும், 1,000 தொடக்க நிலை வணிகங்களை ஆரம்பிப்பதிலும் நம்பிக்கையாக உள்ளது. ICT நிறுவனங்கள் விரைவாக வளர்வதற்கு ஏதுவாக அரசாங்கமும், தனியார் துறையும் நெருங்கி செயல்படுவதோடு, தேவையான அறிவு, திறன்கள் மற்றும் அனுபவத்தை மிகக் குறுகிய காலத்தில் பெற ICT மாணவர்களுக்கு அவசியமான அனைத்து வளங்களும் வழங்கப்படுவதால் இது லட்சியமானதும், அடையக்கூடியதுமான இலக்காகும். இவ் இலக்கை அடைவதில் IIT போன்ற முன்னணி கல்வி நிறுவனங்கள் குறிப்பிடத்தக்க பங்கினை வகிப்பதுடன்,  நாடு மற்றும் முழு உலகமும் தற்போதைய கொவிட்-19 தொற்றுநோய் காரணமாக முகங்கொடுத்துள்ள நிச்சயமற்ற காலங்களில் கூட, மாணவர்களின் கல்வி தடங்கல்கள் இன்றி தொடரப்பட வேண்டியது அவசியமாகும். தொழிற்சந்தையில் நுழையும் ICT  நிபுணர்களின் நிலையான வெளியீடானது தற்போதைய தொற்றுநோயால் எதிர்மறையான வளர்ச்சிக் கட்டத்துக்குள் நாடு நுழையும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், பொருளாதாரத்திற்கு மிகவும் தேவையான ஊக்கத்தை அளிக்கும்.

கொவிட்-19 ஆல் தூண்டப்பட்ட முடக்க நிலைக்கு உறுதியான மற்றும் நேர்மறையான முறையில் பதிலளிப்பதன் முக்கியத்துவத்தை உணர்ந்த IIT,  உடனடியாக பல்கலைக்கழகத்தின் முழு நடவடிக்கைகளையும் நிறுத்துவதற்கும், அதன் அனைத்து செயல்பாடுகளையும் வலுவான ஒன்லைன் தளத்திற்கு மாற்றுவதற்கு தேவையான நடவடிக்கைகளையும் எடுத்தது. அதிகாரிகள் வழங்கிய உத்தரவுகளுக்கு இணங்கவும், மாணவர்கள் மற்றும் ஊழியர்களை நோயின் அச்சுறுத்தலிலிருந்து பாதுகாப்பதைக் கருத்தில் கொண்டும், அனைத்து மாணவர்கள் மற்றும் ஊழியர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய IIT பல முற்போக்கான நடவடிக்கைகளை எடுத்துள்ளது. தற்போது, ​​அனைத்து விரிவுரைகளும் மூல அட்டவணைகளின் பிரகாரம் ஒன்லைனில் நடாத்தப்படுகின்றன, இதனால் மாணவர்கள் அந்தந்த கற்கை நெறிகளில் பின்தங்கியிருக்க மாட்டார்கள் என்பதுடன் அவர்கள் உரிய நேரத்தில் தங்கள் பரீட்சைக்கு அமர முடியும். வீட்டிலிருந்து வேலை செய்யும் பொருட்டு செயற்பாட்டு நடவடிக்கைகள் சிரமமின்றி மாற்றப்பட்ட பின்னர்,  IIT யின் அனைத்து நிர்வாக செயல்பாடுகளும் கூட ஒன்லைனில் IIT ஊழியர்களால் வினைத்திறனாக மேற்கொள்ளப்படுகின்றன. இதன் விளைவாக, மாணவர்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறாமல் விசாரணைகளை மேற்கொண்டு, கற்கை நெறிகளில் இணைந்து கொள்வதுடன், ஒன்லைனில் கட்டணத்தை செலுத்தவும் முடியும். மே மாதத்தில் ஆரம்பிக்கவுள்ள மாஸ்டர் கற்கை நெறிகளில் இணைய எதிர்ப்பார்ப்போர் IIT இன் ஒன்லைன் சேவைகளைப் பயன்படுத்தி எளிதில் மேற்கொள்ள முடியும் என்பதுடன், நேர்முகப் பரீட்சை முதல் ஆவணங்கள் சமர்ப்பித்தல் வரை செயன்முறைகளின் அனைத்து அம்சங்களும் ஒன்லைனிலேயே நடாத்தப்படுகின்றன. மேலதிகமாக, IIT ஊழியர்கள் தொடர்ந்து மாணவர்களுடன் தொடர்பில் இருந்து வருவதுடன், அவர்கள் அனைவரும் இலங்கையில் கொவிட்- 19 தொற்று நிலைமை தொடர்பான பிந்திய தகவல்களைப் பெற்று வருவதினை உறுதி செய்துள்ளனர்.

அனைத்து மட்டங்களிலும் ICT கல்வியை ஆதரிக்கும் அதன் நோக்கத்துடன் IIT, சாதாரண தர மற்றும் உயர் தர மாணவர்களை இவ்வாண்டு இறுதியில் நடைபெறவுள்ள பரீட்சைக்கு தயார்படுத்த தற்போது தொடர்ச்சியாக நடாத்தி வரும் தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப (ICT) பாடத்திற்கான கருத்தரங்குகளை ஒன்லைனுக்கு உயர்த்தியுள்ளது IIT பல ஆண்டுகளாக இந்த உதவிக் கருத்தரங்குகளை சீராக நடத்தி வருவதுடன், நாடு முழுவதும் உள்ள நூற்றுக்கணக்கான பாடசாலைகள் மற்றும் ஆயிரக்கணக்கான மாணவர்கள் இதனால் கணிசமாக பயனடைகிறார்கள். தற்போதைய முடக்கல் நிலையினால் ஏற்பட்டுள்ள கட்டுப்பாடுகளை கருத்தில் கொண்டு, இந்த நேரத்துக்கேற்ற ஏற்பாடானது அதிபர்கள் மற்றும் ஆசிரியர்கள் ஆகியோர் ICT பாடத்தை மாணவர்களுக்கு கற்பிப்பதற்கான சிறந்த தளத்தை இது வழங்குகின்றது. இதன் மூலம் அவர்கள் தமது கற்றல் நடவடிக்கையை எவ்வித தடையுமின்றி தொடர்வதற்கும், முறையே அவர்களின் ICT பாடத்திட்டங்களை பூர்த்தி செய்யும் முயற்சிகளுக்கு மிக அவசியமான ஊக்கத்தையும் அளிக்கிறது. இந்த இரண்டு மணித்தியால கருத்தரங்கானது இணைய உலகம் (IoT), புரோகிராமிங், செயல்வழிப் படம் உட்பட பல தலைப்புகளை உள்ளடக்கியது. இவை IIT இன் மிகவும் அனுபவம் வாய்ந்த கல்வி சார்ந்த உறுப்பினரால் நடாத்தப்படுவதுடன், இது இரண்டு வகைப்படும். முதல் வகையானது, ஒரு பாடசாலையானது தனது ICT பாடத்திட்டத்தின் தேவைகளின் அடிப்படையில் முன்வைக்கும் தலைப்பின் கீழ் பார்வையாளர்களுக்கு கற்பிப்பதற்காக விசேடமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. எந்த நேரத்திலும் ஒரு பாடசாலையைச் சேர்ந்த சுமார் 100 மாணவர்கள் சராசரியாக இவ் வகையான கருத்தரங்குகளில் பங்கேற்கிறார்கள். இரண்டாவது வகை, ஒரு பொதுக் கருத்தரங்காகும். இது பல்வேறு வகையான ICT தலைப்புகளை உள்ளடக்கியது. மேலும், நாடு முழுவதும் உள்ள அனைத்து பாடசாலை மாணவர்களுக்குமானதாகும். இந்த ஒவ்வொரு கருத்தரங்குகளிலும் சுமார் 400 மாணவர்கள் பங்கேற்றனர்.

இது தொடர்பில் தனது கருத்துக்களை பகிர்ந்து கொண்ட, IIT இன் பணிப்பாளர் , பேராசிரியர் ஜயந்த விஜேரத்ன, “முன்னணி IT மற்றும் வணிக பல்கலைக்கழகமாக இருப்பதென்பது தேவை ஏற்படின், நாங்கள் எப்போதும் ஒன்லைன் செயல்பாட்டுக்கு மாறுவதற்கு தயாராக இருக்கிறோம் என்பதாகும்.  இதன் விளைவாக, கொவிட்- 19 நோய் இலங்கையைத் தாக்கியபோது, ​​நாங்கள் ஒன்லைன் தளத்திற்கு மாறுவதற்கான ஏற்பாடுகளைச் செய்தோம். இதன்மூலம் அவர்கள் இப்போது அனைத்து செயல்பாடுகளையும் வீடுகளில் இருந்து மேற்கொள்ள முடிவதால் அனைத்து மாணவர்களும், IIT ஊழியர்களும் பாதுகாப்பாகவும், நலமாகவும் இருப்பதை உறுதிசெய்ய முடியும். எந்தவொரு பாடநெறிகளிலும் தாமதங்கள் அல்லது இடையூறுகள் இல்லை என்பதை உறுதிப்படுத்த விரைவான நடவடிக்கைகள் முக்கியமானதாகும். ஏனெனில் இதுபோன்ற சூழ்நிலை மாணவருக்கு மட்டுமல்ல, முடக்கல் காலப்பகுதியில் பொருளாதாரத்திற்கும் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதனாலாகும். நாங்கள் அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறோம், இந்த நிலைமை தொடருகையில்  நாம் ஏற்படக்கூடிய எந்தவொரு சவால்களையும் எதிர்கொள்ள முழுமையாக தயாராக இருக்கின்றோம்,” என்றார்.

1990 ஆம் ஆண்டில் ஸ்தாபிக்கப்பட்ட IIT ஆனது, தகவல் தொழில்நுட்பம் மற்றும் முகாமைத்துவம் ஆகிய துறைகளில் சர்வதேச அங்கீகாரமுடைய பிரித்தானிய பட்டப்படிப்புகளை வழங்கும் இலங்கையின் முதலாவது தனியார் உயர்கல்வி நிறுவனம் என்ற பெருமையைக் கொண்டுள்ளது. ஐக்கிய இராச்சியத்தின் University of Westminster மற்றும் Robert Gordon ஆகிய பல்கலைக்கழகங்களின் உள்வாரியான பட்டப்படிப்பு மற்றும் பட்டமேற்படிப்பு கற்கைநெறிகளை வழங்கும் விருது பெற்ற கல்வி நிறுவனமாக IIT திகழ்கிறது. IIT ஆனது, உலகத் தரம் வாய்ந்த பட்டதாரிகளை உருவாக்குவதன் வாயிலாக இலங்கையின் தகவல் தொழில்நுட்பம் மற்றும் முகாமைத்துவம் ஆகிய துறைகளை வலுப்படுத்துவதில் முக்கிய இடத்தை வகிக்கின்றது. 1990 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டதிலிருந்து, IIT 3,000 இற்கும் அதிகமான பட்டதாரிகளை உருவாக்கியுள்ளதுடன், தற்போது 25 நாடுகளை தளமாகக் கொண்டுள்ளது. இந்த பட்டதாரிகள் உள்நாட்டு மற்றும் சர்வதேச பெருநிறுவனங்கள் மற்றும் அரச தாபனங்களில் தகவல் தொழில்நுட்பம் அல்லது முகாமைத்துவ துறையிலான வல்லுனர்களாகத் திகழ்வதுடன், 250  பன்னாட்டு நிறுவனங்கள் மற்றும் புளுசிப் கம்பனிகளில் உயர் பதவிகளை அலங்கரிப்பதன் வாயிலாக குறித்த நிறுவனங்களின் வளர்ச்சிக்கு அளப்பரிய பங்களிப்பினை வழங்கி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *